அகமதாபாத் விமான விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு
- விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
- விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது.
கடந்த ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருகிலுள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் குடும்பங்கள் அமெரிக்க விமான உற்பத்தியாளர் போயிங் மற்றும் எரிபொருள் ஸ்விட்ச் -ஐ தயாரித்த உபகரண நிறுவனமான ஹனிவெல் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவின் டெலாவேர் உயர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
காக்பிட் குரல் பதிவுக் கருவியில் ஒரு விமானி, "நீங்கள் ஏன் எரிபொருளைக் தடுத்தீர்கள்?" என்று கேட்பது பதிவாகியுள்ளது. மற்ற விமானி, "நான் செய்யவில்லை" என்று பதிலளித்தார்.
விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது. குழுவினர் 14 வினாடிகளுக்குள் அவற்றை 'ரன்' நிலைக்குத் சொடுக்கினாலும், விமானம் ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்து 32 வினாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது.
இருப்பினும், இந்த சுவிட்சுகளின் வடிவமைப்பை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சோதனை செய்து அங்கீகரித்துள்ளது.
இந்த விபத்து குறித்து எப்.ஏ.ஏ. நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், எரிபொருள் சுவிட்ச் கோளாறால் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது.