செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 150 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்

Published On 2018-08-01 22:53 GMT   |   Update On 2018-08-01 22:53 GMT
ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்தனர். #Afghanistan
மஷார் இ ஷெரீப்:

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டுப்போரை பயன்படுத்தி ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கும் தலீபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தன.

குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது. இன்னொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்தும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அழுத்தம் வந்தது. இந்த நிலையில் அங்கு 150-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்தனர்.

இதுபற்றி வட பகுதி ராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ கூறும்போது, “கடந்த காலத்திலும் இப்படி ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண் அடைந்தது உண்டு. ஆனால் இந்த முறை அதன் தலைவர்களில் ஒருவரும், துணைத்தலைவரும் 150-க்கும் மேற்பட்டோருடன் சரண் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

இதன்மூலம் வட பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.  #Afghanistan  #tamilnews
Tags:    

Similar News