செய்திகள்

விஜய் மல்லையாவின் ரூ.963 கோடி சொத்து ஏலம்: ஸ்டேட் வங்கி நடவடிக்கை

Published On 2018-07-06 06:51 GMT   |   Update On 2018-07-06 07:27 GMT
விஜய் மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துக்களை ஸ்டேட் வங்கி தனது கடனுக்காக இன்று ஏலம் விட்டுள்ளது.#Mallya #statebank

புதுடெல்லி:

பெங்களூரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தனது கிங்பி‌ஷர் விமான நிறுவனத்துக்கு 13 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி தலை மறைவாகி விட்டார்.

அவர் மீது சி.பி.ஐ.யும் அமலாக்கப் பிரிவு இயக்குனரகமும் வழக்குகள் பதிவு செய்துள்ளன. அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வங்கி கடனுக்காக விஜய் மல்லையாவின் மும்பை, கோவா, பெங்களூர் உள்பட பல இடங்களில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டும், கையகப்படுத்தி ஏலம் விடப்பட்டும் வருகிறது.

இந்த நிலையில் விஜய் மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துக்களை ஸ்டேட் பாங்கி தனது கடனுக்காக இன்று ஏலம் விட்டது.

இதற்கிடையே 13 இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் லண்டனில் உள்ள மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை சோதனையிடவும், கையகப்படுத்தி ஏலம் விட்டு பணத்தை பெறவும் அனுமதி கேட்டு இங்கிலாந்து ஐகோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மாதம் 26-ந்தேதி இதற்கு அனுமதி அளித்து லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி லண்டன் லேடிவாக் சொகுசு பங்களா, குயின் ஹுலேன், டெவின், வெல்வின் கட்டிடங்களில் சோதனை நடத்தி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய வங்கிகள் அந்த சொத்துக்களை கைப்பற்றி ஏலம் விட்டு பணத்தை திரும்ப பெற வழி வகுத்துள்ளது.

இதற்கிடையே லண்டன் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ளது. #Mallya #statebank

Tags:    

Similar News