செய்திகள்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபரிடம் டிரம்ப் நேர்முக தேர்வு நடத்தினார்

Published On 2018-07-03 20:09 GMT   |   Update On 2018-07-03 20:09 GMT
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்தியர் அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார். #DonaldTrump #AmulThapar
வாஷிங்டன்:

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் அந்தோணி கென்னடி. 81 வயதான இவர் வரும் 31-ந் தேதி ஓய்வு பெற உள்ளார். இது குறித்து ஜனாதிபதி டிரம்பை கடந்த வாரம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னர், அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்.

இதையடுத்து காலியாகிற ஒரு நீதிபதி பதவிக்காக 25 பேரது பெயர்களை ஜனாதிபதி டிரம்ப் பரிசீலனை செய்து வருகிறார் என தகவல்கள் கசிந்தன. அந்த 25 பேரில் ஒருவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த நீதிபதி அமுல் தாபர் (49) ஆவார்.



இந்த நிலையில், அமுல் தாபர் உள்ளிட்ட 4 பேரிடம் ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நேர்முகத் தேர்வு நடத்தி உள்ளார்.

மற்றவர்கள் பிரெட் கவனாக், எமி கோனி பேரட், ரேமண்ட் கேத்லெட்ஜ் ஆவர்.

அமுல் தாபருக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையின் குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கன்னல் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இந்த நேர்முக தேர்வு குறித்து ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, “இன்னும் 2 அல்லது 3 பேரிடம் நேர்முகத் தேர்வு நடத்துவேன். அதன்பிறகு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு உரியவர் தேர்வு செய்யப்படுவார். இது குறித்த அறிவிப்பு 9-ந் தேதி வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்படுகிற நபர், மிகச் சிறந்த நபராக இருப்பார்” என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு அமுல் தாபரை 6-வது அப்பீல் கோர்ட்டு நீதிபதியாக டிரம்ப் நியமனம் செய்தது நினைவுகூரத்தக்கது.   #DonaldTrump #AmulThapar #tamilnews
Tags:    

Similar News