நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன்? - பிசிசிஐ விளக்கம்
- ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் பந்து வீசுவதற்கான உடற் தகுதிச் சான்றை இன்னும் ஹர்திக் பாண்ட்யா பெறாததால், அவரை நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யவில்லை என பிசிசிஐ இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் டி20 உலக கோப்பை அணியிலும் அவர் உள்ளதால் வேலைப் பளு அதிகரித்து விடக் கூடாது என்ற நோக்கத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.