செய்திகள்

சீனாவை கடுப்பேற்றும் அமெரிக்கா - தைவானில் தூதரகம் திறப்பு

Published On 2018-06-12 15:05 GMT   |   Update On 2018-06-12 15:05 GMT
சீனாவுடனான பனிப்போரை மேலும் மூர்க்கமாக்கும் வகையில் தைவான் தலைநகரில் புதிய தூதரகத்தை அமெரிக்கா இன்று திறந்துள்ளது.
டாய்பே:

தைவான் நாட்டை சீனாவின் ஒன்றிணைந்த பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவானுடன் இருந்த தூதரக உறவுகளை கடந்த 1979-ம் ஆண்டில் முறித்துகொண்ட அமெரிக்கா தைவானுக்கு தேவையான போர் ஆயுதங்களை விற்பனை செய்வதில் மட்டும் முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில், தைவானில் சுமார் 25 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய தூதரகத்தை அமெரிக்கா இன்று திறந்துள்ளது. அமெரிக்கா - தைவான் பயிலகம் என இருந்த கட்டிடத்தை சீரமைத்து உருவாக்கப்பட்ட இந்த தூதரகத்துக்கு அமெரிக்க பிரதிநிதிகள் அலுவலகம் என பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்க கல்வி மற்றும் கலாச்சாரத்துறை துணை மந்திரி மேரி ராய்ஸ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். இந்த பயணத்தில் பல விவகாரங்களை நாம் சந்தித்துள்ளோம். ஜனநாயகத்தை பாதுகாக்கும் நமது அர்ப்பணிப்பில் ஒவ்வொரு திருப்பத்திலும் புதிய சவால்களை நாம் எதிர்கொண்டு வந்திருக்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் தைவான் - அமெரிக்கா இடையிலான நல்லுறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளதாக தைவான் அதிபர் ட்ஸாய் இங்-வென் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவுக்கு சீனா கண்டனமும் அதிருப்தியும் தெரிவித்துள்ளது. தைவான் விவகாரத்தில் சீனாவுக்கு அளித்த வாக்குறுதியை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும். தவறான செயல்பாடுகளை திருத்திகொண்டு, சீன-அமெரிக்க உறவுகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் அமெரிக்கா நடந்துகொள்ள வேண்டும் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #USdefactoembassy #TaiwanChina tensions
Tags:    

Similar News