இந்தியா

வாரணாசியில் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வகுப்புகள் அறிமுகம்

Published On 2026-01-12 07:46 IST   |   Update On 2026-01-12 07:46:00 IST
  • பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
  • வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

வாரணாசி என அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார, நாகரிக, கல்வி உறவு இருந்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி உத்தரவின்பேரில், காசி தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

அதன் காரணமாக வாரணாசியில் தமிழ் கற்கும் ஆர்வம், இந்தி மாணவர்களிடம் எழுந்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். வாரணாசியில் உள்ள அரசு குயின் கல்லூரி மாணவர் பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அரசு குயின் கல்லூரி, தினந்தோறும் மாலைநேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுமித் குமார் கூறியதாவது:-

தமிழ்நாட்டை சேர்ந்த சந்தியா குமார் சாய் இதற்கு முன்பு மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பேசினோம். அவரும் ஆன்லைன் வகுப்பு எடுக்க சம்மதித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, மாலை நேர தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளியில் முறையான தமிழ் பாட வகுப்பு அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக பள்ளி முதல்வர் பிரியங்கா திவாரி தெரிவித்தார்.

இதுதவிர, கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும்வகையில், இந்தி கற்றுக்கொடுப்பதற்காக வாரணாசியில் இருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

Tags:    

Similar News