செய்திகள்

2018 டெவலப்பர் நிகழ்வு - ஆப்பிள் அறிவித்த முக்கிய அம்சங்கள்

Published On 2018-06-05 04:38 GMT   |   Update On 2018-06-05 04:38 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஆப்பிள் அறிவித்தது. #WWDC18 #Memoji
கலிஃபோர்னியா:

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 சர்வதேச டெவலப்பர்கள் நிகழ்வில் மென்பொருள் சார்ந்த புதிய அம்சங்களை அந்நிறுவனம் அறிவித்தது. ஐஓஎஸ் 12 துவங்கி, வாட்ச் ஓஎஸ், டிவி ஓஎஸ், மேக் ஓஎஸ் என ஆப்பிள் சாதனங்களுக்கான இயங்குதளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயங்குதளத்திலும் பல்வேரு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு டெவலப்பர் நிகழ்வில் ஹார்டுவேர் சார்ந்து எவ்வித அறிவிப்பும் இடம்பெறவில்லை.

சிரி சேவையை மேம்படுத்தியிருக்கும் ஆப்பிள், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி, ஏஆர்கிட் போன்றவற்றை ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில் சேர்த்திருக்கிறது. இத்துடன் மேக் மற்றும் ஆப்பிள் வாடச் சாதனங்களை முன்பை விட மிக எளிமையாக இயக்க வழி செய்யும் அம்சங்களை புதிய இயங்குதளங்கள் கொண்டிருக்கின்றன.



ஐஓஎஸ் 12-இல் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை குறைக்கும் ஆப்பிள்: 

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து இருப்பதை ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 12 தளத்தின் புதிய அம்சம் மூலம் தெரிவித்திருக்கிறது. டு நாட் டிஸ்டர்ப் (DND), ஸ்கிரீன்டைம் ஆப் உள்ளிட்டவை உங்களின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை டிராக் செய்து தகவல்களை மிக துல்லியமாக வழங்குகிறது. 

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பயன்பாடு குறித்த தகவல்களை பார்த்து, அதற்கு ஏற்ப செட்டிங்களை மாற்றியமைக்க முடியும். இதேபோன்று அனைவரும் தங்களின் பயன்பாட்டை குறைக்க புதிய செட்டிங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஒவ்வொரு செயலியை பயன்படுத்த குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து விட்டால், நீங்கள் செட் செய்த நேரத்தில் உங்களுக்கு நோட்டிஃபிகேஷன் மூலம் எச்சரிக்கை செய்யப்படும். இதன் மூலம் செயலிகளில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க முடியும்.



அனைவரையும் கவர்ந்த மீமோஜி:

ஆப்பிள் நிறுவனத்தின் அனிமோஜி அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மீமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களது முகத்தை அனிமேஷன் வடிவில் உருவாக்கி ஐமெசேஜில் பகிர்ந்து கொள்ள வழி செய்கிறது. மெசேஜஸ் கேமராவில் இதுபோன்ற பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேபோன்று ஃபேஸ்டைம் அம்சத்தில் இனி க்ரூப் கால்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையில் இனி ஒரே சமயத்தில் 32 பேருடன் க்ரூப் கால்களை பேச முடியும். இத்துடன் வீடியோவில் ஒருவர் பேசும் போது, அவரின் வீடியோ தானாக பெரியதாகும் படி நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. க்ரூப் ஃபேஸ்டைம் அம்சம் ஐபோன், ஐபேட் மற்றும் ஐமேக் சாதனங்களில் வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் கொண்டு ஆடியோ முறையிலும் பதில் அளிக்க முடியும்.



சிரி வழங்கும் சிறப்பு சேவைகள் என்னென்ன?

ஆப்பிள் வாய்ஸ் அசிஸ்டன்ட் சேவை போட்டியாளர்களை பந்தாடியிருந்தாலும், அதிக வசதிகளை வழங்குவதில் அமேசானின் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த இரு சேவைகளும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வடிவில் சந்தையை ஆக்கிரமித்துவிட்டன. 

2018 டெவலப்பர் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் சிரி ஷார்ட்கட்களை அறிமுகம் செய்தது. இதை கொண்டு சில செயலிகளில் குறிப்பிட்ட கமான்டுகளை உருவாக்க முடியும். இத்துடன் உங்களின் அன்றாட பயன்பாட்டை வைத்து சிரி இனி உங்களுக்கு பயன்தரும் பரிந்துரைகளை வழங்கும்.



ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி அற்புதங்கள்:

ஐஓஎஸ் 12 இயங்குதளத்தின் முதல் அறிவிப்பாக ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி இருந்தது. ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் டிஜிட்டல் புகைப்படங்களை நிஜ உலகில் பிரதிபலித்து விசேஷ ஹெட்போன்கள் மூலம் அவற்றை போன்களில் பார்க்க வழி செய்கின்றன. போக்கிமான் கோ அல்லது ஃபில்ட்டர்கள் மற்றும் லென்ஸ்கள் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டியின் பிரபல கேம் மற்றும் செயலிகளாக இருந்தன.

ஒரு ஆண்டுக்கு முன் ஆப்பிள் டெவலப்பர் நிகள்வில் அந்நிறுவனம் டெவலப்பர்களுக்காக ஏஆர் கிட் அறிமுகம் செய்தது. இந்த கிட் பயன்படுத்தி டெவலப்பர்கள் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிக்களை உருவாக்க முடியும். மேலும் வால்வ் நிறுவனத்துடன் இணைந்து விர்ச்சுவல் ரியாலிட்டி தளத்தை டெஸ்க்டாப் மேக் சாதனங்களுக்கு கொண்டு வரயிருப்பதாக ஆப்பிள் அறிவித்து இருந்தது. 

இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தளத்துக்கென USDZ எனும் புதிய ஃபார்மேட் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஃபார்மேட் கொண்டு பல்வேறு வசதிகளை வழங்க ஆப்பிள் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. அந்த வகையில் அடோப் நிறுவனம் மெஷர் எனும் புதிய ஏஆர் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன் ஆப்பிள் நிறுவனம் ஏஆர் கிட் 2 அறிமுகம் செய்து, அதில் செய்யக்கூடியவற்றை நிகழ்ச்சியின் மேடையிலேயே நிகழ்த்தி காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்துக்கான சந்தை வரும் ஆண்டுகளில் பெருமளவு வளர்ச்சி பெற இருக்கிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் சுமார் 2.2 கோடி விஆர் மற்றும் ஏஆர் ஹெட்செட்களை வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News