தமிழ்நாடு செய்திகள்

ஆவணங்கள் இல்லாவிட்டாலும் நிலத்தின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் - தமிழக அரசின் அசத்தல் திட்டம்

Published On 2025-05-23 07:24 IST   |   Update On 2025-05-23 07:24:00 IST
  • பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
  • முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது.

தமிழகத்தில் நிலம் தொடர்பான மோசடிகளை தடுக்கும் வகையில், அரசு முழுமையான வெளிப்படை தன்மையை கொண்டு வருகிறது. இதற்காக நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம், எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் பயன்படுத்தக்கூடிய https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற இணையவழி சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

இதில் பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் போன்றவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், பட்டா பெயரை மாற்றுவதற்கும் பொதுமக்கள் நேரடியாக இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த நிலையில், கிராமப்புறங்களில் நில விவரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்காக, தமிழக அரசு "வில்லேஜ் மாஸ்டர்" என்ற இணையதளத்தை உருவாக்கியது. இதில், ஒரு நிலத்தின் சர்வே எண் தெரியாவிட்டாலும், அதன் மூலம் சர்வே எண்ணை கண்டறிந்து, உரிமையாளர் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் இப்போது, பொதுமக்களுக்கு நில விவரங்களை மிகவும் தெளிவாக வழங்க தமிழக அரசு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. எந்த உரிமை ஆவணமும் இல்லாவிட்டாலும், தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள நில விவரங்களை ஒரே இடத்தில் விரைவாகப் பெறலாம். இதற்காக புவியியல் தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம், தமிழகத்தின் எந்த பகுதியில் உள்ள நிலத்தை தேர்வு செய்தால் நிலத்தின் எல்லை எங்கு இருக்கிறது?, உரிமையாளர் யார்?, நிலத்தின் பரப்பளவு எவ்வளவு? யார் பெயரில் பட்டா இருக்கிறது? யார் பெயரில் பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளது? வில்லங்க சான்றிதழ்? நிலத்தின் அரசு மதிப்பு எவ்வளவு? உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள முடிகிறது.

மேலும், அந்த நிலம் எந்த மாவட்டம், தாலுகா, அருகிலுள்ள போலீஸ் நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, மின்சார அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்ற தகவல்களும் முழுமையாக காட்டப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்கள் இந்த தகவல் அமைப்புகளை உருவாக்கி இருந்தாலும், பல புதிய வசதிகளை ஒரே அமைப்பில் ஒருங்கிணைத்து வழங்கும் முயற்சி தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக நடைமுறையில் வந்துள்ளது.

முந்தைய காலங்களில், சர்வே எண் இல்லாவிட்டால் நில விவரங்களை தெரிந்து கொள்ள இயலாது. ஆனால் தற்போது, எந்த ஆவணமும் இல்லாவிட்டாலும், நமது நில விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக https://tngis.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கூகுள் மேப்பில் இருப்பிடத்தை தேர்வு செய்வது போல், நமது இருப்பிடத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் விவரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாவட்டம், கிராமம் வாரியாகவும் தேடி நமது நிலத்தை எளிதாக கண்டறிய முடிகிறது.

தற்போது இந்த இணையதளத்தில் சென்னை மாநகரம் மற்றும் அனைத்து ஊரக பகுதிகளின் நில விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. மற்ற மாவட்டங்களில் உள்ள நகர் பகுதிகள் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. எனவே இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தின் அனைத்து நிலத் தகவல்களும் இதில் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த வசதிகளை இணையதளத்தோடு மட்டுமல்லாமல், TN-GIS என்ற மொபைல் செயலியாகவும் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

Tags:    

Similar News