தமிழ்நாடு செய்திகள்

தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் பணி தீவிரம்

Published On 2025-05-03 11:53 IST   |   Update On 2025-05-03 11:53:00 IST
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி வாசுகி தலைமையில் 5 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • அதிகாரிகளும் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவியது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

விசாரணை நிறைவில், தமிழக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து சென்னையில் தமிழக அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி நீலகிரியில் துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் ஏராளமான துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை. தமிழக அரசின் அச்சுறுத்தல் காரணமாகவே அவர்கள் மாநாட்டுக்கு வர மறுத்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.

இந்த சூழ்நிலையில் காலியாக உள்ள சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தர் இடத்தை நிரப்ப தேடுதல் குழுவை தமிழக அரசு நியமித்து இருந்தது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தரைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி வாசுகி தலைமையில் 5 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று 2 பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டது. மேலும் 3 பல்கலைக்கழகளுக்கான துணை வேந்தர் தேடுதல் குழுவை மீண்டும் செயல்பட உத்தவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுல் குழு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது.

தமிழ்நாடு அரசு நியமித்துள்ள தேடுதல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதிகளுக்கு இடமில்லை.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 11 பல்கலைக்கழகத்திற்கு தற்போது துணை வேந்தர்கள் இல்லை. துணை வேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பல்கலை. பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் துணை வேந்தர்களை நியமித்து பல்கலை. செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து அதிகாரிகளும் பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை தேர்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர்.

Tags:    

Similar News