நேற்றுடன் கெடு முடிந்தது: அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுப்பாரா ராமதாஸ்?
- அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
- கடந்த 4-ந்தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையேயான கருத்து மோதல் இன்னும் நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 17-ந்தேதி டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கு அவர் 31-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் வருகிற 10-ந் தேதிக்குள் (அதாவது நேற்று) உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
டாக்டா் ராமதாஸ் அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் இன்று அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் கட்சி விரோத நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.