கடந்த 11 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம்- எல். முருகன் பேச்சு
- ஒரே நாடு, ஒரே தேர்தல் விரைவில் வரப்போகிறது மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
- ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றும் தேசிய இவிதான் செயலியை தொடங்கி வைத்து மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:-
பிரதமர் மோடியின் 3-வது முறையான ஆட்சி 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஒரு பிரதமர் தொடர்ந்து 3 முறை இருந்ததில்லை. நரேந்திரமோடி 3-வது முறையாக பிரதமர் ஆகியுள்ளார். நாட்டின் வளர்ச்சி, வேகம் 11 ஆண்டில் எவ்வித தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 27 கோடி மக்களை 11 ஆண்டில் வறுமைக்கோட்டிற்கு மேல் உயர்த்தியுள்ளோம் என உலக வங்கி கூறியுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வந்தபோது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், படிப்பு விஷயம் தெரியாதவர்கள், அவர்கள் செல்போன் பயன்படுத்த தெரியாது, இதை எப்படி பயன்படுத்துவார்கள்? என கேள்வி கேட்டார். ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.
சத்தியமங்கலம் காட்டில் வெள்ளரிக்காய் வாங்கியபோது, பணத்தை வங்கியில் செலுத்தும்படி கூறியது. முன்பு ஆட்சி செய்தவர்கள் திட்டங்களை தீட்டவோ, நிறைவேற்றவோ தைரியம் இல்லாமல் இருந்தனர். பிரதமராக மோடி வந்த பின் தைரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்டு வரப்பட்டது.
உலகில் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் 2-வது இடத்தை இந்தியா பெற்று சாதனை பெற்றுள்ளது. இந்திய பொருளாதாரம் உலகளவில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. 2027-ல் 3-ம் இடம், 2047-ல் அப்துல்கலாம் கனவு கண்ட வல்லரசு நாடாக இந்தியா மாறியிருக்கும்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கும், தீவிரவாதிகளுக்கும் பிரதமர் மோடி மிகப்பெரிய அடியை கொடுத்துள்ளார். இங்கிருந்தே தாக்குதல் நடத்தும் அளவுக்கு ராணுவ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. 2014-க்கு முன்பு ராணுவ தளவாடங்கள் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டது.
ஆனால் பிரதமராக மோடி வந்த பின்பு தொழில்நுட்பம் வளர்ந்து, ரூ.50 ஆயிரம் கோடிக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளோம்.ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு, ஒரே தேர்தல் வரப்போகிறது.
தற்போது ஒரு நாடு, ஒரு செயலி என இப்போது இவிதான் செயலி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்மூலம் சட்டசபையில் கேள்விகளை உடனடியாக செயலகத்துக்கு அனுப்ப முடியும். சட்டசபை அலுவல் பட்டியலை பார்க்கலாம். சட்டசபை, பாராளுமன்றத்தில் நடப்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். இது இந்த இவிதான் செயலி மூலம் கொண்டுவரப்பட உள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு விஷயத்தின் விபரம் முழுவதும் அறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
நம் இந்திய நாடு 2027-ல் மிகச்சிறந்த வல்லரசு நாடாக, வளர்ச்சியடைந்த பாரதமாக, உலகின் விஸ்வகுருவாக திகழ வேண்டும் என பிரதமர் மோடி திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.
உலகின் முதல் ஜனாப் பாலத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். புல்லட் ரெயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறையிலும் நாடு முன்னேறி வருகிறது. ஜனநாயகத்தின் அடிப்படையான சட்டத்தை இயற்றும் பணியில் இந்த செயலி உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.