காங்கிரஸை தாக்கி விஜய்க்கு அட்வைஸ் கொடுத்த விஜய பிரபாகரன்!
- விஜய் அண்ணாவிற்கு தம்பியாக ஒரு அட்வைஸ்.
- காங்கிரஸ், கூட்டணிக்காக ஜனநாயகன் படத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கூட்டணி, தேர்தல் அறிக்கை, வேட்புமனு, பொதுக்கூட்டம் போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளன. அந்தவகையில் இன்று தேமுதிக, 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' என்ற பெயரில் பெரும்மாநாட்டை தேமுதிக நடத்திவருகிறது. இந்த மாநாட்டில் பத்து தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்க உள்ளார்.
இதனிடையே மாநாட்டில் விஜய பிரபாகரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
"விஜயகாந்த் மண்ணிற்கு சென்றாலும், பல லட்சம் தொண்டர்களின் மனதில் விதைக்கப்பட்டுள்ளார். நமது வாழ்வின் ஒளியாக இருக்கிறார். நிச்சயமாக நமக்கான காலம் உள்ளது. கூட்டணி எதுவாக இருந்தாலும் நாம் ஒன்றுப்பட்டு செயல்படவேண்டும். இரண்டு பெரிய கட்சிகளுக்கும் தேமுதிகவின் சேவை, தேவை வேண்டும்.
தேமுதிகவிற்கு எத்தனை இடங்கள் கொடுக்கப்படுகிறதோ அதுதான் உங்களை ஆட்சியில் அமரவைக்கும். தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெறுகிறதோ அதுதான் மெகா கூட்டணி. அதுதான் வலிமையான கூட்டணி. உண்மையை உரக்கச்சொல்ல தேமுதிக தொண்டனால்தான் முடியும். ஜனநாயகன் பிரச்சனை போய்க்கொண்டு இருக்கிறது. விஜய் அண்ணாவிற்கு தம்பியாக ஒரு அட்வைஸ்.
இன்று காங்கிரஸ், கூட்டணிக்காக உங்கள் படத்திற்கு ஆதரவாக பேசுகிறார்கள். நம்பிவிடாதீர்கள். அது மீனுக்கு தூண்டில்போடுவதுபோல; மாட்டிக்கொள்ளாதீர்கள். நீங்கள் நன்றாக வரவேண்டும். அவர்கள் விருதுநகரில் என்ன செய்தார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களை நம்பிவிடாதீர்கள். இது என்னுடைய சிறிய அட்வைஸ். விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள்." என தெரிவித்தார்.