அமெரிக்கா வரி விதிப்பு: இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு மிகப்பெரிய அபாயம்- துரை வைகோ
- ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது.
- தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர்.
மதிமுக தென் மண்டல மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு துணை பொது செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தூத்துக்குடி ஆர்.எஸ்.ரமேஷ் குமரி வெற்றிவேல், நெல்லை மத்திய மாவட்டம் கே.எம்.ஏ. நிஜாம், நெல்லை புறநகர் உவரி எம்.ரைமண்ட், தென்காசி தெற்கு ராம உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என கூறி சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இது பலத்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். தேர்தல் ஆணையத்தை பொருத்தவரை ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஒரு அரசியல் கட்சியை போல் நடந்து கொண்டுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசிடம் கேட்டோம். அந்த விவாதத்துக்கு அவர்கள் மறுத்துவிட்டனர். தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தான் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அங்கு பேரணி நடந்து வருகிறது.
தி.மு.க.வை பொறுத்தவரை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றியுள்ளனர். சில வாக்குறுதிகளுக்கு முதல்-அமைச்சரும் துறை சார்ந்த அமைச்சரும் பதில் அளித்துள்ளனர். பல வாக்குறுதிகள் நிறைவேறாமல் இருப்பதற்கு நிதி நெருக்கடியும் ஒரு காரணம். இதுபோன்ற நிலை பா.ஜ.க. அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் நிலவுகிறது.
இந்திய ஏற்றுமதி பொருள்களுக்கு அமெரிக்க நாடு 50 சதவீதம் வரிவிதிப்பால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பொறுத்த வரை ஜவுளித்துறை முக்கிய தொழிலாக உள்ளது.
அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆயிரக் கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலை உருவாகியுள்ளது.
இதனால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் தங்களது வேலை இழக்கும் நிலை வரும். மத்திய அரசு இதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஏற்கனவே மத்திய அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிகிறது. 200 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதில் 40 நாடுகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
அந்த நாடுகளுடன் பேசி அமெரிக்க மூலமாக ஏற்படும் வர்த்தக இழப்பை ஈடு செய்யும் அளவுக்கு ஏற்றுமதியை கொண்டு சென்றால் இப்பிரச்சினையை சரி செய்யலாம் என்ற முயற்சி இருக்கிறது. இதனை விரைந்து செய்ய வேண்டும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியதை தவிர்க்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.