தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. மாநாடு- சுமார் 45 நிமிடங்கள் பேசும் விஜய்

Published On 2025-08-21 11:31 IST   |   Update On 2025-08-21 11:31:00 IST
  • பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 300 மீட்டர் நீளத்திலான ரேம்ப் வாக் நடைமேடயில் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
  • வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார்.

அந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சும், அணுகுமுறையும் அரசியல் வல்லுநர்களை உற்று கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது த.வெ.க.வின் பார்வை தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அதிக இடங்களை பிடிக்கும் அணிகளே ஆட்சியை பிடிப்பதற்கான சூழல் அதிகமாகியிருக்கிறது. எனவே தி.மு.க., பா.ஜ.க.வை தொடர்ந்து தற்போது த.வெ.க.வும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை குறி வைத்திருக்கிறது. அதன்படி விஜய், த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டார்.

அதன்படி த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன. இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாநாட்டு அறிவிப்பை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. மொத்தமுள்ள 500 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட மைதானத்தில், 250 ஏக்கர் மாநாடு நடைபெறும் இடமாகவும், மீதமிருக்கும் 300 ஏக்கர் நிலம் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு நடைபெறும் இடங்களில் ஆங்காங்கே பிரமாண்ட எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொண்டர்கள் அமர பச்சை கம்பளம் விரித்து அதில் 2 லட்சம் சேர்களும், வி.ஐ.பி.க்கள் அமர சிவப்பு கம்பளம் விரித்து அதில் 300 சேர்களும் போடப்பட்டுள்ளன. இரவை பகலாக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள், போக்கஸ் லைட்டுகள் என மாநாட்டு திடல் ஜொலிக்கிறது.

அதேபோன்று வாகன நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒரே நேரத்தில் வாகனங்களை வெளியே அனுப்பாமல் நெறிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை கட்டுப்படுத்தவும் காவல்துறைக்கு உதவியாக இருக்கவும் த.வெ.க. நிர்வாகிகளே பல்வேறு குழுக்கள் அமைத்துள்ளனர்.

மாநாட்டின் மேடைகளில் த.வெ.க. நிர்வாகிகள் அனைவரும் அமரும் வகையில் சுமார் 216 மீட்டர் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மாநில நிர்வாகிகள் மற்றும் முதல்முறையாக மாவட்டச் செயலாளர்கள் அமருவதற்காக 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. விஜய் 300 மீட்டர் வரை நடந்து சென்று தொண்டர்களை அருகில் சந்திக்க ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, 600 பேர் கொண்ட மருத்துவக்குழுவில் 250 டாக்டர்கள், 250 செவலியர்கள் பணியில் உள்ளனர். பொதுமக்கள் பாதுகாப்பாக அமர்ந்து மாநாடு நிகழ்வுகளை பார்க்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவை தவிர குடிநீர் வசதி, கழிவறை வசதி உள்ளிட் டவை சிறப்பாக செய்து தரப்பட்டுள்ளன.

இதுஒருபுறம் இருக்க மாநாட்டிற்கு வரும் தொண்டர்களையும், பொது மக்களையும் வரவேற்கும் விதமாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் இரவு பகல் பார்க்காமல் மாநாட்டு வேலைகளை நிறைவு செய்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களை சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை வழங்கினார். அதன் பலனாக இன்று மாநாடுகளை கட்டத்தொ டங்கியுள்ளது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் நேற்று சென்னையில் இருந்து கார் மூலம் மதுரை வந்தடைந்தார். சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்ற அவர் பின்னர் அங்கிருந்து மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். அனைத்து ஏற்பாடுகளை பார்த்து வியந்த அவர் நிர்வாகிகளை பாராட்டினார். இன்று பிற்பகல் மாநாடு 3.15 மணிக்கு தொடங்குகிறது.

பிற்பகலில் த.வெ.க. கொடியை தலைவர் விஜய் ஏற்றி வைக்கிறார். பின்னர் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 300 மீட்டர் நீளத்திலான ரேம்ப் வாக் நடைமேடயில் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார். பின்னர் மாநாட்டு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள த.வெ.க. கொள்கை தலைவர்களான டாக்டர் அம்பேத்கர், காமராஜர், பெரியார், வீரமங்கை வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 10 தீர்மானங்கள் நிறைவேற்றம் உள்ளிட்டவை நடக்கிறது. நிறைவாக த.வெ.க. தலைவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு எழுச்சி உரையாற்ற உள்ளார். சுமார் 45 நிமிடங்களுக்கு விஜய் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது யதார்த்தமான, புதிய உத்வேகம் கொடுக்கும் பேச்சை கேட்க தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Tags:    

Similar News