தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விஜய் - எந்தெந்த நாட்களில் தெரியுமா?
- ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
- 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் பணியாற்றி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்ற சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார். அதேபோல், 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இன்று முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். காஞ்சிபுரத்தில் இருந்து உதயநிதி இன்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
இதனிடையே, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வருகிற 13-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி திருச்சியில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்க காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தினங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. 3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.