தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரத்தை தொடர்ந்து ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டம்- செங்கோட்டையனின் யோசனையை ஏற்ற விஜய்

Published On 2025-11-27 11:03 IST   |   Update On 2025-11-27 11:03:00 IST
  • இ.பி.எஸ் தலைமை மீது அதிருப்தி கொண்ட அ.தி.மு.க.வின் சில நிர்வாகிகள், தொண்டர்கள் செங்கோட்டையனை பின்பற்றி த.வெ.க.வில் இணையலாம்.
  • செங்கோட்டையனால் த.வெ.க.வுக்கு பலம் கூடும் என்பதை அதிமுகவின் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர்.

கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் நன்கு அறியப்பட்ட நபர். கொங்கு மண்டலத்தின் நாடி துடிப்பு என்ன, பிரச்சனைகள் என்ன என்றெல்லாம் அவருக்கு தெரியும். எனவே செங்கோட்டையனின் அனுபவத்தை பயன்படுத்தி கொங்கு மண்டலத்தில் வலுவாக கால்பதிக்க த.வெ.க முயற்சிகளை மேற்கொள்ளும்.

மேலும் எம்.ஜி.ஆரின் அரசியலை கூடவே இருந்து பார்த்தவர் செங்கோட்டையன். எனவே எம்.ஜி.ஆரை அடிக்கடி முன்னிலைப்படுத்தி பேசும் விஜய்க்கு செங்கோட்டையின் அனுபவம் கைகொடுக்க வாய்ப்புள்ளது.

அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் கூட்டங்களை மேலாண்மை செய்த அனுபவமும் செங்கோட்டையனுக்கு உள்ளது. அதிலும் ஜெயலிதாவின் சுற்றுப்பயணங்களை வகுத்து அதற்கு தலைமை தாங்கி பிரசார கூட்டங்களை சிறப்பாக மேலாண்மை செய்த வியூகவாதியாகவும் அவர் இருந்துள்ளார். இதனால் புவியியல் ரீதியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளும் அத்துப்படி. த.வெ.கவில் அவர் இணைந்துள்ளதால் விஜயின் பிரசார சுற்றுப்பயணத்தை வகுக்கும் பணியை இவரே மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் போன்ற நெருக்கடியான சூழலில் உள்ள விஜய்க்கு, செங்கோட்டையின் வியூகங்கள் நல்ல வழியை காட்டும்.

இதனையெல்லாம் தாண்டி, செங்கோட்டையன் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம், அக்கட்சியில் ஒருங்கிணைப்பை விரும்பும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

எனவே, இ.பி.எஸ் தலைமை மீது அதிருப்தி கொண்ட அ.தி.மு.க.வின் சில நிர்வாகிகள், தொண்டர்கள் செங்கோட்டையனை பின்பற்றி த.வெ.க.வில் இணையலாம். இதற்கான தொடக்கப்புள்ளியாக மாறியிருக்கிறார் செங்கோட்டையன்.

இன்று செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்ததை தொடர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அண்ணாவின் மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஏற்கனவே மக்கள் சந்திப்பை நடத்திய விஜய் தற்போது தந்தை பெரியாரின் மாவட்டமான ஈரோட்டில் மக்கள் சந்திப்பை நடத்த வேண்டும் என செங்கோட்டையன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதனை விஜய் ஏற்று, அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் விரைவில் விஜய் ஈரோட்டில் மக்களை உள் அரங்கில் சந்தித்து பேச உள்ளார்.

அரை நூற்றாண்டு காலம் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ளும் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைவது விஜய்க்கு ஒரு வலிமை தான் என்பதில் எந்த சந்தேகமும்இல்லை. மேலும் அவர் பல கட்சி தலைவர்களுடனும் உறவை கொண்டிருப்பதால், த.வெ.க சிறப்பான கூட்டணியை அமைக்கவும் அவர் ஒரு பாலமாக செயல்படலாம்.

செங்கோட்டையனால் த.வெ.க.வுக்கு பலம் கூடும் என்பதை அதிமுகவின் தரப்பினர் கடுமையாக மறுக்கின்றனர். 'கோபிசெட்டிப்பாளையத்தை தாண்டி அவருக்கு ஈரோடில் கூட பெரிய செல்வாக்கு கிடையாது. எங்கள் கட்சியிலேயே எம்ஜிஆர் காலத்து தலைவர் என்பதால் அவருக்கு உயர்ந்த பதவிகளை வழங்கினர். மற்றபடி அவரால் கொங்கு மண்டல அரசியலில் எந்த தாக்கமும் ஏற்படாது. அவரால் இப்போதுள்ள சூழலில் கோபியில்கூட வெல்ல முடியாது' என்கின்றனர்.

எப்படி பார்த்தாலும் செங்கோட்டையனின் வருகை என்பது தமிழக வெற்றிக்கழகத்துக்கு ஏதோ ஒரு வகையில் லாபம்தான். ஆனால் அதனை விஜய் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News