தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. நிர்வாகிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்பு- பி.என்.எஸ். புதிய சட்டப்பிரிவுகள் கூறுவது என்ன?

Published On 2025-09-30 07:21 IST   |   Update On 2025-09-30 07:21:00 IST
  • கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
  • போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர்.

திருச்சி:

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முதல் தகவல் அறிக்கையில் மத்திய அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்த பி.என்.எஸ். சட்ட பிரிவுகளான 105 (கொலைக்கு சமமான கொலைக்கான தண்டனைக்குரிய செயல்), 110 (குற்றமற்ற கொலை முயற்சி செயல்), 223 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர மற்றும் அலட்சிய செயல்), 223 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமை), டி.என்.பி.பி.டி.எல். பிரிவு 3 (பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முதல் இரண்டு சட்டப்பிரிவுகளுக்கு 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரையும், பொதுச்சொத்துகள் சேதத்திற்கு சிறைத்தண்டனை மட்டுமின்றி அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கும் பி.என்.எஸ். சட்டத்தில் இடம் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஒருவர் கூறினார்.

மேலும் இந்த எப்.ஐ.ஆரில் 'அதர்ஸ்' என்ற வார்த்தை இருப்பதால் போலீசார் தங்களது விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக கட்சியின் தலைவர் விஜய் பெயரையும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி சேர்க்கும்பட்சத்தில் அவருக்கும் மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News