தமிழ்நாடு செய்திகள்

மதுரை த.வெ.க. மாநாடு களை கட்ட தொடங்கியது

Published On 2025-08-16 15:00 IST   |   Update On 2025-08-16 15:00:00 IST
  • மாநாட்டுக்கு சுமார் 20 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அவசர மருத்துவ சேவை பணியில் சுமார் 400 மருத்துவ குழுவினர் ஈடுபட இருக்கின்றனர்.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி கட்சித் தலைவர் விஜய் தலைமையில் மதுரையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

இதையொட்டி மாநாடு பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தினமும் மாநாடு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

குடிநீர், பாதுகாப்பு, வாகன நிறுத்தம், சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட உள்ளது.

மேலும் தட்டுப்பாடு வராமல் இருக்க 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் விஜய் படம் பொறிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மாநாட்டுக்கு சுமார் 20 லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து அவசர மருத்துவ சேவை பணியில் சுமார் 400 மருத்துவ குழுவினர் ஈடுபட இருக்கின்றனர். மாநாட்டை சுற்றிலும் ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள்.

மேலும் கூட்டத்தின் நடுவில் யாராவது பாதிக்கப்பட்டால் மின்னல் வேகத்தில் சென்று அவசர மருத்துவ வசதி செய்வதற்கு டிரோன் மூலம் மருத்துவ வசதி செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிறிய கார் வடிவில் இருக்கும் டிரோனில் 25 கிலோ மருந்து பொருட்கள் இருக்கும்.

மாநாட்டு திடலில் கூடி இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூட்டத்தில் அவசர மருத்துவ சேவை தேவைப்படும்போது மருந்து பொருட்களுடன் டிரோன் பறந்து சென்று மருத்துவ சிகிச்சை வழங்கப்பட இருக்கிறது.

இதையொட்டி டிரோன் மருத்துவ சேவைக்கான சோதனை ஓட்டம் இன்று காலை மாநாட்டு பந்தலில் நடந்தது. சோதனை ஓட்டத்தை கட்சி பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நேரில் பார்வையிட்டார்.

மாநாட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மாநாட்டு பந்தல் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. த.வெ.க. மாநாட்டு பந்தலை பார்ப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சுற்றுலா தலம் போல் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்பி எடுத்து செல்கின்றனர்.

Tags:    

Similar News