தமிழக சட்டசபை இன்று கூடுகிறது - ஆளுநர் உரையாற்றுவாரா?
- முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பின்னர் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார்.
- சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவது வழக்கம். ஆனால் தேசிய கீதத்தை முதலில் இசைக்க வேண்டும் என்று ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவி வைத்த வேண்டுகோளை ஏற்காத நிலையில், ஆளுநர் இன்று உரை நிகழ்த்துவாரா? அல்லது வாசிக்காமலேயே சென்றுவிடுவாரா? என்பது இன்றுதான் தெரியும்.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதன் பின்னர் ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவார். அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். ஆளுநர் உரை நிகழ்த்தாமல் சென்றுவிட்டால், சபாநாயகர் அதை வாசித்து முடிப்பார். பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும். அதோடு இன்றைய அவை நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும்.
அதன் பின்னர் சபாநாயகர் அறையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்பது அதில் முடிவு செய்யப்படும். மறைந்த எம்.எல்.ஏ. பொன்னுசாமிக்கு சட்டசபையில் 21-ந்தேதியன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்படும் என்று தெரிகிறது.
வருகிற 22-ந் தேதியன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதில் எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெறும். அவர்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டத்தொடரின் கடைசி நாளான 24-ந் தேதியன்று பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது.
சட்டசபையில் இன்று வாசித்தளிக்கப்படும் ஆளுநர் உரையில், தமிழக அரசின் புதிய அறிவிப்புகள் இடம் பெறுமா? என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.