அருமை சகோதரர் கமல்ஹாசன் கூறியதில் தவறு ஒன்றும் இல்லை- வைகோ
- கிரேக்கம், லத்தீன் மொழிகளைவிட தொன்மையானது தமிழ் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
- கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற தக் லைஃப் பட ப்ரோமோஷன் விழாவில் கமல் பேசும்போது "தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்" எனக் குறிப்பிட்டார்.
இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கமல் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் தக் லைஃப் படத்தை வெளியிட அனுமதிக்கமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்தார்.
அப்போது அவர்," கமல் கூறிய கருத்தில் தவறில்லை" என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழ் குறித்த கமல் கருத்தில் எந்த தவறும் இல்லை. தமிழில் இருந்து பிறந்ததுதான் சமஸ்கிருதம்.
அதை 24,000 பேர்தான் பேசுகின்றனர். கிரேக்கம், லத்தீன் மொழிகளைவிட தொன்மையானது தமிழ் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.