தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவத்தில் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை- டிடிவி தினகரன் பேட்டி

Published On 2025-10-11 15:08 IST   |   Update On 2025-10-11 15:08:00 IST
  • எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார்.
  • ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.

திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு விஜய் வருவது என்பது நடக்காத காரியம். தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றை சி.பி.ஜ விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக போலீஸ்துறை மீது உள்ள நம்பிக்கை போய்விடக் கூடாது என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தி.மு.க ஆட்சி மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மனு செய்திருப்பார்கள். இந்த கருத்தை சொல்வதால் நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என நீங்கள் கருத வேண்டாம். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை.

இதுபோன்ற கொடூர எண்ணம் செந்தில் பாலாஜிக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பயனாளிகள்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். டாஸ்மாக் மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஊழல் செய்துள்ளது என குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்கு செல்லாமல் ஊர், ஊராக சென்று பேசுவது ஏன்? ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News