தமிழ்நாடு செய்திகள்

அரசு பள்ளிக்கு அரிவாளுடன் வந்த பிளஸ்-2 மாணவனால் பரபரப்பு: சக மாணவரை மிரட்டியதால் அதிர்ச்சி

Published On 2025-07-05 15:02 IST   |   Update On 2025-07-05 15:02:00 IST
  • மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.

சுரண்டை:

தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளங்குளம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பிளஸ்-2 படிக்கும் மாணவன் ஒருவன் சம்பவத்தன்று சக மாணவனை விளையாட்டாக தலையில் தட்டியுள்ளான். இதைப்பார்த்து அந்த மாணவன் கோபம் அடைந்து திட்டியுள்ளான்.

அதன் பின்னர் சக மாணவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் தன்னை தலையில் தட்டிய மாணவர் மீது தொடர்ந்து ஆத்திரத்தில் இருந்த அந்த மாணவன் தனது வீட்டிற்கு சென்று புத்தகப்பைக்குள் அரிவாளை எடுத்து வைத்துக்கொண்டான்.

பின்னர் மறுநாள் பள்ளிக்கு வந்தபோது, தனது தலையில் தட்டிய சக மாணவனை அவன் கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் தனது ஆசிரியரிடம் தகவலை தெரிவித்துள்ளான்.

இதுகுறித்து உடனடியாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து அரிவாள் வைத்திருந்த மாணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News