NDA கூட்டணியில் தே.மு.தி.க.?- சுதீஷ் கூறிய பதில்
- நினைவேந்தல் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாள் சுதீஷும் பங்கேற்று இருந்தார்.
- தே.மு.தி.க மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்து வருகிறார்.
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து, ஜி.கே.மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாள் சுதீஷும் பங்கேற்று இருந்தார். NDA கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தே.மு.தி.க. பொருளாள் சுதீஷும் பங்கேற்றதால் NDA கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுகிறதா? என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சுதீஷிடம், பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சுதீஷ், நட்பின் காரணமாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிவித்தார்.
முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த தே.மு.தி.க. நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் சீட் வழங்காததால் அதிருப்தியில் உள்ளது. அதை தொடர்ந்து, சமீப காலமாக தி.மு.க.வுடன் நட்புறவு கொண்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் தே.மு.தி.க மாநாட்டில் அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்து வருகிறார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் தே.மு.தி.க. நீண்ட இழுபறிக்கு பிறகே கூட்டணி குறித்து அறிவிக்கிறது. இதனால் கூட்டணி விவகாரத்தில் பிரேமலதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகிறது.