தமிழ்நாடு செய்திகள்

287 வாரிசுகளை பதவியில் வைத்துள்ள பா.ஜ.க. தி.மு.க.வை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை- சபாநாயகர்

Published On 2025-11-15 14:24 IST   |   Update On 2025-11-15 14:24:00 IST
  • பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது.
  • மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?

நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

பணகுடி, வள்ளியூர், கூடங்குளம், திசையன்விளை உள்ளிட்ட ராதாபுரம் தொகுதியில் நடத்தப்பட்ட 15 நலம் காக்கும் முகாம்களிலும் காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு, மாலை தேநீர் வரையிலும் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில் பங்கேற்றோருக்கு முழு உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடல்நிலையை பதிவு செய்த தனிப்பட்ட பைல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகை பரிசோதனைகளுக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு மக்கள் ஒரு ரூபாயும் செல வில்லாமல் சேவையைப் பெற்றுள்ளனர்.

பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. அவர் ஒரு ஆலோசனை வழங்குபவர் தான். ஆனால் அவருக்கு களப்பணியில் உள்ள உண்மையான நிலைமை தெரியாது. அவர் யோசனை சொல்வார். ஆனால் அது அவர் சொந்த ஊரிலேயே செல்லுபடியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?.

பீகார் தேர்தலால் வாரிசு அரசியல் தோல்வியடைந்து விட்டது. அது தமிழ்நாட்டிலும் தொடரும் என பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. மத்திய மந்திரி அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்?. ராணுவ மந்திரியின் மகன் என்ன செய்கிறார்?. பா.ஜ.க.வில் 287 வாரிசுகள் பதவியில் உள்ளனர். இத்தனை வாரிசுகளை வைத்திருக்கும் பா.ஜ.க. ஒரே ஒரு வாரிசு வைத்திருக்கும் தி.மு.க.வை குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News