தமிழ்நாடு செய்திகள்

சட்டமன்றத்தில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை- சபாநாயகர் அப்பாவு

Published On 2025-11-01 13:38 IST   |   Update On 2025-11-01 13:38:00 IST
  • பாபநாசம், மணிமுத்தாறு அணையை இணைப்பதற்கான ஆய்வு நடத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பணி நியமனத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.

நெல்லை:

நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையை திறந்து வைத்த பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எந்த கடிதமும் அ.தி.மு.க சார்பில் சட்டமன்ற பேரவைக்கு கொடுக்கப்படவில்லை. அவ்வாறு கடிதம் அளிக்கும் பட்சத்தில் மனு மீது பரிசீலனை நடத்தப்படும். அ.தி.மு.க. அளிக்கும் ஆவணத்தின் அடிப்படையில் ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் உயர் பதவியில் இருந்து கொண்டு தமிழகம் குறித்து இந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்க வேண்டாம். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள நிதீஷ் குமார் செய்யும் துன்பத்தால் தான் அங்கிருந்து புலம்பெயர்ந்து அங்கு உள்ளவர்கள் தமிழகம் வந்துள்ளனர். தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் துன்பமாக இல்லை. இன்பமாக இருக்கின்றனர்.

வட மாநிலத்தில் இருந்து தமிழகத்தில் வசிப்பவர்களும் இலவச பஸ் பயணம், படிப்பில் உதவித்தொகை உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களால் பயன்பெற்று வருகின்றனர்.

பாபநாசம், மணிமுத்தாறு அணையை இணைப்பதற்கான ஆய்வு நடத்தி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வனத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சில சிக்கல்கள் இருக்கிறது. எனினும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அந்த சிக்கல்களை தீர்த்து அணைகளை இணைக்க நடவடிக்கை எடுத்து விடுவார்.

நகராட்சி நிர்வாகத்துறையில் 2,538 பணி இடங்களை நேர்மையாக வெளிப்படை தன்மையோடு அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் அமைச்சர் நேரு நியமனம் செய்துள்ளார். பணி நியமனத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை.

அமலாக்கத்துறை தமிழக டி.ஜி.பி.க்கு பணி நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக விசாரணை நடத்த கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. இது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். உறுதிப்படுத்தப்படாத ஆவணங்கள் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை அல்லது விசாரணை ஆகியவையை அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மணல் ஊழல், டாஸ்மாக் ஊழல் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வைத்து தேர்தல் நேரத்தில் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்ற நோக்கத்தில் இது போன்று அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. தமிழக கவர்னர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய பாதி மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மீதி மசோதா அவரிடமே கிடப்பில் உள்ளது என்றார். 

Tags:    

Similar News