பெண்கள்தான் தி.மு.க. ஆட்சியை மீண்டும் 2026-ம் ஆண்டு தூக்கி பிடிப்பார்கள் - விஜய்க்கு சேகர்பாபு பதிலடி
- சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.
- விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், மன்னராட்சி முதல்வரே, உங்கள் ஆட்சியை பற்றி கேட்டால், உங்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. நீங்கள் ஒழுங்காக ஆட்சி நடத்தி இருந்தால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும். 2026-ம் ஆண்டு தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க. என்று கூறினார்.
இந்நிலையில் இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:
ஒரு சினிமா பாடல் தான் நினைவுக்கு வருகிறது.
"மன்னராட்சி காத்து நின்ற தெங்கள் கைகளே
மக்களாட்சி காணச்செய்த தெங்கள் நெஞ்சமே
எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
கல்லில் வீடுகட்டித் தந்த தெங்கள் கைகளே
கருணைத் தீபம் ஏற்றிவைத்த தெங்கள் நெஞ்சமே"
இதுதான் அவருக்கு பதிலாக சொல்லிக்கொள்கிறேன்.
* பெண்கள் தான் இந்த ஆட்சியை மீண்டும் 2026-ம் ஆண்டு தூக்கி பிடிப்பார்கள்.
* முதலமைச்சர் எங்கு போனாலும் வரவேற்கிற கூட்டத்தில் 80 சதவீத கூட்டம் பெண்கள் கூட்டம்தான்.
* சக்தி மயமான இந்த ஆட்சியை எந்த சக்தியாலும் அகற்ற முடியாது.
* விஜய் தவழ்கின்ற குழந்தை. நாங்கள் பி.டி.உஷா போன்று பல்வேறு ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று வெற்றி கண்டவர்கள்.
* பல கரடு முரடான பாதைகளை கடந்து வந்தவர்கள்.
* சிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள், போராட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆர்ப்பாட்ட களம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், பொதுக்கூட்டம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், மக்கள் பணி என்றால் என்னவென்று தெரியாதவர்கள், புயல், மழை, வெள்ளம் போன்றவற்றை கூட தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து வந்து 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து அதை போட்டோ போட்டுக்கொண்டு, அதையும் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் தயாராக இருந்தால் தமிழகத்தின் நிலை இப்படி தான் இருக்கும். இப்படி தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.