தடையை மீறி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நடத்திய சீமான் - தேனியில் பரபரப்பு
- மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் இருக்கும்.
- ஆடு, மாடுகளுக்கும் ஓட்டுரிமை வேண்டும்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி மேய்ச்சலுக்காக தனது மாடுகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்ற போது வனத்துறையினர் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வனத்துறையினர் சமரசம் பேசி முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது போல் சிலர் அரியவகை மரங்களை வெட்டி கடத்துவதாக வனத்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை கண்டித்து தேனி மாவட்டம் போடி அருகே உள்ள அடவுபாறையில் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். அதன்படி இன்று அவர் அடவுப்பாறையில் கால்நடைகளுடன் வனப்பகுதிக்குள் நுழைய முயன்றார். அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் என ஏராளமானோர் சென்றனர்.
ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் அனுமதியில்லை என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சீமான் கூறுகையில்,
மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் சென்றால் மட்டுமே மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகள் இருக்கும். கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே ஆடு, மாடுகளுக்கும் ஓட்டுரிமை வேண்டும். இலங்கையில் நடந்தது மட்டும் இனப்படுகொலை அல்ல. தமிழகத்தில் மது பழக்கத்தை பழக்கி சாமானிய மக்களை கொல்வதும் இனப்படுகொலைதான். வெளி மாநிலத்தவர்களுக்கு இங்கு அனுமதி கொடுத்தால் விரைவில் அவர்கள் நம்மை வெளியே அனுப்பி விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து மலையேறி மாடு மேய்க்கும் சீமானின் போராட்டத்தை தடுத்து வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் வனத்துறையினரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து சீமான் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர் வனப்பகுதிக்குள் மாடு மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் விதித்த தடையை மீறி சீமான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏறபட்டுள்ளது.