தமிழ்நாடு செய்திகள்

கரூர் சம்பவத்துக்கு விஜய் தான் முதன்மை காரணம்- சீமான்

Published On 2025-10-28 13:20 IST   |   Update On 2025-10-28 13:20:00 IST
  • கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும், ஆதவ் அர்ஜூனா மீதும் சி.பி.ஐ. வழக்குபதியும்.
  • இயக்குனர் மாரி செல்வராஜ் சாதி வெறியை தூண்டுவதாக கூறுவது அவர்களது இயலாமையை காட்டுகிறது.

நெல்லை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் முதலில் சேலம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நாமக்கல், கரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது ஏன்? கரூர் சம்பவம் நடைபெறுவதற்கு முதல் காரணம் விஜய்தான்.

த.வெ.க. தலைவர் விஜய் வருவதால்தான் அங்கு கூட்டம் கூடியது. விபத்து நடைபெற்றது. எனவே முதன்மை காரணமான விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல் கரூர் மாவட்ட செயலாளர் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு இல்லை என்றால் த.வெ.க.வினர் ஏன் முன்ஜாமீன் கேட்கிறார்கள்.

கரூர் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதும் புஸ்சி ஆனந்த் கோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை திரும்ப பெறுகிறார். இது எதன் வெளிப்பாடு. சி.பி.ஐ. தங்களை காப்பாற்றும் என்பதால் தானே. பா.ஜ.க. கூட்டணிக்கு த.வெ.க. அழைப்பதால் தான் சி.பி.ஐ. விஜய் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யாமல் உள்ளது.

விஜய் கூட்டணிக்கு மறுத்தால் விஜய் மீதும், ஆதவ் அர்ஜூனா மீதும் சி.பி.ஐ. வழக்குபதியும்.

இயக்குனர் மாரி செல்வராஜ் சாதி வெறியை தூண்டுவதாக கூறுவது அவர்களது இயலாமையை காட்டுகிறது. ஒரு நாடு தனது கடல் பரப்பில் 12 நாட்டிக்கல் மைல் தான் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆனால் இலங்கை நமது தமிழகத்தின் கச்சத்தீவு வரை ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே வர உள்ளதாக தகவல்கள் வருகிறதே என கேட்டனர். அதற்கு முன்கூட்டியே வந்தால் என்ன திருப்பம் வந்துவிட போகிறது என்றார்.

தொடர்ந்து தி.மு.க. 200 இடங்களில் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறும் என கூறுவது பற்றி கேட்ட போது, இன்னும் 6 மாதம் உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். 

Tags:    

Similar News