மதுரையில் வரும் 10ம் தேதி 2 ஆயிரம் ஆடு-மாடுகளுடன் சீமான் மாநாடு
- ஆடு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் மாநாட்டை நடத்துகிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் வளர்ப்பு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். என்னிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று அவர் தேர்தல் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் அரிதாகிவிட்டதையும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளார்.
இதுபோன்ற சூழலில் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காடுகளை பாதுகாப்பதாக கூறி வனத்துறையினர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் மேய விடுவதற்கு அனுமதிப்பது இல்லை. இதன் காரணமாக ஆடு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு
உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் வருகிற 10ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் மாநாட்டை நடத்துகிறார்.
இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆடு மாடுகளுடன் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு அழைப்புவிடுத்து மாடுகளின் பின்னணியில் சீமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியிருப்ப தாவது:-
மதுரை வீராகனூர் கிராமத்தில் வருகிற 10-ந் தேதி மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்கிற முழக்கத்தை முன்வைத்து ஆடு, மாடுகளின் மாநாடு நடக்கிறது.
பேசும் திறனற்ற உயிர்களுக்காக பேசுவோம். அவர்களின் உரிமைக்காகவும் பேசுவோம். ஆடும், மாடும் நமது செல்வங்கள். கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றயவை என்று வள்ளுவ பெருமகனார் கூறியுள்ளார்.
கல்விதான் மானுடருக்கு செல்வம். ஆனால் மாடும் செல்வங்கள்தான் என்பதை அவர் வலியுறுத்தி பாடியுள்ளார். அந்த நம் செல்வங்களை பாதுகாக்க நாம் எல்லோரும் மதுரையில் கூடுவோம்.
ஆடும், மாடும் அற்ப உயிர்கள் அல்ல. நம் அருமை செல்வங்கள். அவர்களின் உரிமைக்காக உரக்க முழங்குவோம். என் அன்பு சொந்தங்கள் இதையே அழைப்பாக ஏற்று மதுரை வீராகனூருக்கு வாருங்கள்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.