தாய் வேறொரு நபருடன் சென்றதால் 2 பேத்திகளை கொன்று விட்டு பாட்டிகள் தற்கொலை
- மிகுந்த மனவேதனையடைந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி தனது பேத்திகள் 2 பேருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
- சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்குளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). இவரது மகள் காளீஸ்வரி (45). இவரது மகள் பவித்ரா (28).
இவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிக்திக்ஷா (7), தீப்திஷா (5) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் என்டர்பிரைசஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
பவித்ராவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு பைனான்சியருடன் சென்றார். அதன் பிறகு உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு அறிவுரை கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில் பவித்ராவுக்கும் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வேலைக்கு வந்த கொத்தனாருடன் பேசி பழகிய பவித்ரா அதன் பிறகும் அவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.
இந்த விபரம் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். 2 குழந்தைகள் உள்ள நிலையில் இது போன்ற விஷயம் ஊருக்கு தெரிய வந்தால் நமது குடும்பத்துக்கு அவமானம் என அறிவுரை கூறியுள்ளனர்.
ஆனால் அதனையெல்லாம் கேட்காமல் கொத்தனாருடன் தொடர்ந்து பேசி வந்த பவித்ரா நேற்று திடீரென மாயமானார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த விபரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்ததால் வீட்டில் வந்து விசாரிக்கத் தொடங்கினர். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி தனது பேத்திகள் 2 பேருடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இந்த விபரத்தை தனது தாய் செல்லம்மாளிடம் கூறவே நானும் உங்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
நேற்று இரவு தூங்கச் சென்ற போது காளீஸ்வரி மற்றும் செல்லம்மாள் ஆகியோர் தங்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு தூங்கிக் கொண்டு இருந்த பேத்திகள் 2 பேரையும் தூக்கில் தொங்க விட்டனர். அதன் பிறகு தாங்கள் 2 பேரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இரவில் எழுந்து பார்த்த பிரபாகரன் தனது குழந்தைகள் மற்றும் மாமியாரை தேடினார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒரே அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து கதறி அழுதார்.
பின்னர் இது குறித்து இடையகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.