தமிழ்நாடு செய்திகள்

அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-07-02 21:57 IST   |   Update On 2025-07-02 21:57:00 IST
  • வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினை அஜித்குமார் தாயார் மாலதி அவர்களுக்கு வழங்கினார்.
  • குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அஜித்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றையதினம் (01.07.2025) அலைபேசியின் வாயிலாக அவரது தாயார் மற்றும் சகோதரரை தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும், அக்குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், இன்றையதினம் (2.7.2025) சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில், பணி நியமன ஆணையினை மறைந்த அஜித்குமார் சகோதரரான நவீன்குமாருக்கு காரைக்குடியில் உள்ள சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.

மேலும், தேளி வருவாய் கிராமத்திற்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் அஜித்குமார் தாயார் மாலதி அவர்களுக்கு வழங்கினார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையின்படி, கூட்டுறவுத்துறை அமைச்சரும், சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளருமான பெரியகருப்பன், திருப்புவனம் வட்டத்தைச் சேர்ந்த மரணம் அடைந்த அஜித்குமார் தாயாரிடம் திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியினை வழங்கினார்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News