பூம்புகாரில் நடந்தது மாநாடு அல்ல... பெருவிழா- ராமதாஸ்
- சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
- புதுக்கோட்டை மாவட்டம் அகழ் ஆய்வில் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பூம்புகாரில் நடந்தது மாநாடு அல்ல பெருவிழா. இதில் 1 லட்சம் மகளிர் பங்கேற்றனர். மழை மட்டும் இல்லாமல் இருந்தால் மிகப்பெரிய மாநாடாக அமைந்திருக்கும். இப்படி ஒரு மாநாட்டை யாராலும் நடத்த முடியாது. எத்தனை பிரமாண்டத்திற்குள்ளையும் அடக்க முடியாத மாநாடாக அமைந்தது. மாநாட்டை சிறப்பாக நடத்திய மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அதேபோல் வருகின்ற 17-ந் தேதி மிக சிறப்பான பொதுக்குழு நடைபெற உள்ளது. அதுவும் வரலாற்று சிறப்பு பொதுக்குழுவாக அமையும்.
சென்னை திருமங்கலம் அண்ணாநகர் பகுதியில் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அறிந்து துடித்து போனேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல் துறை எடுக்க வேண்டும். சிறுமியின் சமூக வலைதளங்களை காவல் துறை ஆய்வு செய்து வருகிறது.
சமூக வலைதளங்களை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதைவிட்டு விட்டு வேறு எதையோ பார்த்து வருகிறார்கள். இதனை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க கச்சத்தீவை மீண்டும் மீட்க வேண்டும் ஏதோ ஒரு காரணத்திற்காக அதை தாரைவார்த்தோம். கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறதோ அதேபோல் ஆற்று மணல் திருடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க நிறுத்த அரசு தயாராக இல்லை.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 49 மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளிலும் சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அரசு நடை முறைப்படுத்த உள்ளதாக தெரிகிறது. அப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்தினால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அகழ் ஆய்வில் தமிழ்நாடு எப்போதும் முன் மாதிரி மாநிலம் தான். புதுக்கோட்டை மாவட்டம் அகழ் ஆய்வில் தற்போது இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.