அன்புமணியுடன் மனக்கசப்பு - ராமதாஸ் விளக்கம்
- சமூக நீதியை இந்திய அளவில் பேச என்னை விட்டால் வேறு யாரும் இல்லை.
- நான் எப்போதும் இனிப்பான செய்தியை மட்டும் தான் சொல்லுவேன்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வன்னியர் சமுதாயத்தில் கையெழுத்து போட தெரியாமல் இருந்த நிலையில் அவர்களை ஆயிரம் வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உருவாக்கி உள்ளோம். இவர்கள் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள், நிறைய நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருந்து மேலவை நீதிமன்றம் வரைக்கும் உருவாகியுள்ளார்கள். என்னுடைய உழைப்பால் என்னுடைய போராட்டத்தால் அனைவரும் பயன்பெற்றுள்ளனர்.
சமூக நீதியை இந்திய அளவில் பேச என்னை விட்டால் வேறு யாரும் இல்லை. நான் ஒருவன் தான் அதைப்பற்றி பேச முடியும். வேறு யாரும் பேச முடியாது, தெரியாது. மிகப் பிற்படுத்தப்பட்ட இந்த சமுதாயம் படித்துக் கொண்டிருக்கிறது. படித்து வக்கீலாக வந்து கொண்டிருக்கிறார்கள். வக்கீல் சங்கங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு தேவை நீங்கள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும். நீதிமன்றங்களில் சமூக நீதி இல்லை, உயர் நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் அன்புமணி ராமதாஸ் தங்களை சந்திக்க வாய்ப்புள்ளதா என கேட்டபோது வருவார். விரைவில் தன்னை வந்து சந்திப்பார். இருவருக்கும் இடையே மனகசப்பு இல்லை. நான் எப்போதும் இனிப்பான செய்தியை மட்டும் தான் சொல்லுவேன். நான் தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் இனிப்பான செய்திகளை மட்டும் தான் சொல்லுவேன். டாக்டராக இருந்தாலும் இனிப்பான மருந்து தான் கொடுப்பேன். கசப்பான மருந்தை கொடுக்க மாட்டேன். திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுப்பிரமணிய அய்யர் சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையவில்லை என்று சொன்னார். ஆனால் சிங்கத்தின் கால்கள் பழுதடையவில்லை, சீற்றமும் குறையவில்லை என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.