அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை- ராமதாஸ்
- நான் ஐ.சி.யூ.வில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன்.
- பா.ம.க.வை தோற்றுவித்தது, அதற்கு சொந்தக்காரன் நான் தான்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
தைலாபுரம் வீட்டில் சில நாட்கள் ஓய்வில் இருந்த டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவ பரிசோதனைக்காக நானே சென்று மருத்துவமனையில் சேர்ந்தேன். 12 வருடத்திற்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இருந்தேன். அதனை சரி பார்க்க சென்றேன். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து விட்டு வீடு திரும்பிவிட்டேன்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது கட்சி, சாதி, மத பேதமின்றி அனைவரும் என்னை நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்தார்கள். வர முடியாத ஒரு சிலர் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. உடல் நலனில் எந்த பிரச்சனையும் இல்லை என டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்
நான் ஐ.சி.யூ.வில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன். ஒரு மணி நேரம் ஐ.யூ.சி.வில் இருப்பார். அதன்பிறகு அறைக்கு வந்து விடுவார். நான் மருத்துவரிடம் பேசி விட்டேன். இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்ததாக ஒரு கும்பல் கூறியுள்ளது. அவர் பேசிய பேச்சுகள், தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் உலுக்கி இருக்கும்.
டாக்டர் ராமதாசிற்கு ஏதாவது ஆச்சினா நான் சும்மா இருக்க மாட்டேன். தொலைத்து விடுவேன் என பேசி இருக்கிறார்கள். யார் யாரோ வந்து பார்த்து விட்டு போய் கொண்டிருக்கிறார்கள். இது என்ன கண்காட்சியா? எனவும் பேசி இருக்கிறார்கள்.
படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களை கொட்டி இருக்க மாட்டான். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என ஏற்கனவே நிர்வாக குழு கூட்டத்தில் கூறினேன். இது அன்புமணியின் பேச்சு மூலம் உறுதியாக தெரிய வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரைவில் குணமடைய வேண்டுமென கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. தொற்று அறிகுறி அளவிற்கு எனக்கு வியாதி இல்லை.
பா.ம.க.வை தோற்றுவித்தது, அதற்கு சொந்தக்காரன் நான் தான். வியர்வையை சிந்தி இயக்கத்தை வளர்த்தேன். அந்த கட்சியை என்னுடைய கட்சி என அன்புமணி கூற கூடாது. தேர்தல் ஆணையத்தில் சந்திப்போம். கட்சி ஆரம்பிக்கும்போது இப்படி எல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது.
பா.ம.க. கட்சிக்கும், கொடிக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அது அன்புமணிக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அது ஒரு போலியான அமைப்பாக தான் இருக்கும்.
பா.ம.க. கட்சி கொடி, பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. என்னுடைய பெயரின் தலைப்பெழுத்தினை மட்டுமே அன்புமணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனி மனித உழைப்பினால் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து உருவாக்கப்பட்டது பா.ம.க.
பா.ம.க. சட்டபேரவை தலைவர் கொறடாவை மாற்ற முடியாது. சபாநாயகர் மட்டுமே இதனை செய்ய முடியும். தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், பிற கட்சியில் உள்ளவர்கள் தந்தையும், தாயையும் காப்பாற்றாத மகனாக அன்பு மணி உள்ளதாக தெரிவிக்கும் கருத்தாக உள்ளது.
கரூர் சம்பவத்திற்கு உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. அந்த சி.பி.ஐ. விசாரணை காலம் தாழ்த்துமா? என்பது சோழி போட்டு தான் பார்க்க வேண்டும். டிசம்பரில் பொதுக்குழு கூடும் அதில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். இந்த முறை கூட்டணி முடிவு சரியாக இருக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.