தமிழக வெற்றிக்கழகம் விரும்பினால் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்துவார்- ராஜேந்திர பாலாஜி
- அரசியல் கட்சி தலைவர்களும் அதி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
- தேசத்தை பாதுகாக்கும் பா.ஜ.க.வோடு தேச பக்தரான அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.
நெல்லை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை வர்த்தக மையத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நடந்த மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவரான எடப்பாடி பழனிசாமி தான் முடிவுகளை எடுப்பார். பா.ஜ.க. மற்றும் தோழமை கட்சிகளின் ஆதரவுடன் சட்டமன்ற தேர்தலில் 220-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும். சமூக, சமுதாய அரசியல் அமைப்புகளும் அ.தி.மு.க.விற்கு ஆதரவு அளித்து வருகின்றன.
தமிழக வெற்றிக்கழகம் விரும்பினால் அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவார். தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற நினைக்கும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்வார். தி.மு.க. வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். அரசியல் கட்சி தலைவர்களும் அதி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இரட்டை வாக்களர்கள், போலி வாக்காளர்களை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். மூலம் செய்கிறது. இந்த பணியை எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். பீகார் தேர்தல் முடிவு தான் தமிழகத்திலும் வரும். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார்.
பா.ஜ.க. தேசத்தை பாதுகாப்பதாக உள்ளது. தேச பக்தராக அ.தி.மு.க. உள்ளது. தேசத்தை பாதுகாக்கும் பா.ஜ.க.வோடு தேச பக்தரான அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.