தமிழ்நாடு செய்திகள்

ராகுல் காந்தியின் வாகனம் பா.ஜ.க.வினரால் மறிக்கப்பட்டது அரசியல் அராஜகம்- செல்வப்பெருந்தகை

Published On 2025-09-10 15:17 IST   |   Update On 2025-09-10 15:17:00 IST
  • பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும்.
  • பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.

தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இன்று இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும். இது சாதாரண தடையோ அரசியல் சச்சரவோ அல்ல — மக்களின் நம்பிக்கையை நசுக்கி, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியாகும்.

இந்த அராஜகத்தில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங் நேரடியாக பங்கேற்றிருப்பதும், யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாசிச பாஜக கும்பல் ஆட்சி இந்தச் சதியின் பின்னணியில் இருப்பது மறுக்க முடியாத உண்மை.

மக்களின் ஆதரவு கொண்ட மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் எழுச்சியை தடுக்க முடியாமல், பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.

இந்தப் பாசிசக் செயல்களில் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மொத்தமாகச் ஈடுபட்டு, இந்திய ஜனநாயகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தையே தடுக்கும் நிலை உருவாக்குவது, நாட்டின் ஜனநாயக மாண்பை சிதைக்கும் செயல் என்பதை வெளிப்படுத்துகிறது. மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் மறக்க மாட்டார்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நான் இந்தச் செயலை வன்மையாக் கண்டிப்பது மட்டுமல்ல, மக்களிடம் நேரடியாகக் கூறுகிறேன், இது எச்சரிக்கை மணி அல்ல, இது போராட்ட மணி.

ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக புரட்சியின் மேடையாக மாறும். மக்களின் எழுச்சியால் பாஜகவின் அடக்குமுறை சிதறி நொறுங்கி, ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும்.

மோடி, ஆர்எஸ்எஸ், யோகி ஆதித்தநாத் — நீங்கள் ஜனநாயகத்தை அடக்க முயற்சி செய்தாலும், மக்களின் தீர்ப்பு உங்களை வீழ்த்தும். இந்திய ஜனநாயகம் எரியும் நெருப்பாக எழுந்து, உங்களின் பாசிசக் கொடூரங்களை முற்றாக அழித்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News