போலி மருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 'கியூஆர்' குறியீடு- மருந்தகங்களில் ஒட்ட மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உத்தரவு
- நாடு முழுவதும் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது.
- ‘கியூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால், மத்திய பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் உயிரிழந்தன. அதேபோல், புதுச்சேரி மாநிலத்திலும் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நாடு முழுவதும் போலி மருந்துகள் மற்றும் தரமற்ற மருந்துகளால் பொதுமக்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்களும் எழுகிறது. இதுபோன்ற மருந்துகள் குறித்து 104 என்ற எண்ணில் மட்டுமே பொதுமக்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில் புதிய செயலியை தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் உருவாக்கி உள்ளது. இதன் வாயிலாக, 'கியூ ஆர்' குறியீடு உருவாக்கப்பட்டு, அனைத்து மருந்தகங்களுக்கும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் அனுப்பியுள்ளது.
அவற்றை அனைத்து மருந்தகங்களின் முகப்பிலும், பொதுமக்கள் எளிதில் தெரியும் வகையில் காட்சிப்படுத்த மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இனி, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள் மற்றும் பாதிப்பு குறித்து குறிப்பிட்ட 'கியூ ஆர்' குறியீடு வாயிலாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.