செங்கோட்டையனுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு- மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து மதுரையில் போஸ்டர்கள்
- எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் தனித்தனியாக டெல்லி சென்று வந்தது மீண்டும் பேசும் பொருளானது.
- போஸ்டரில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா, ராஜன் செல்லப்பா, வேலுமணி, தங்கமணி ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
திருமங்கலம்:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன் இடையே எழுந்த விரிசல் சமீபத்தில் சமரசம் ஆனதாக பரவலாக பேசப்பட்டது. இதற்கிடையே அவர்கள் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று வந்தது மீண்டும் பேசும் பொருளானது.
இந்தநிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதி மற்றும் கள்ளிக்குடி ஆகிய இடங்களில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செங்கோட்டையனுக்கு ஒய் பிளஸ் செக்யூரிட்டி பாதுகாப்பு வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் அந்த போஸ்டரில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
அதில் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறாமல் போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.