தமிழ்நாடு செய்திகள்

பள்ளி சுவர் இடிந்து விழுந்து 7ஆம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு - நிவாரணம் அறிவிப்பு!

Published On 2025-12-16 19:15 IST   |   Update On 2025-12-16 19:15:00 IST
  • உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
  • சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

திருவள்ளூர் மாவட்டம், கொண்டாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் இப்பள்ளியில், இன்று மதிய உணவு இடைவேளையின்போது மாணவர்கள், பள்ளி வளாகத்தில் உள்ள நடைமேடையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்திருந்தனர். 

அப்போது எதிர்பாராத விதமாக, நடைமேடையை ஒட்டியிருந்த பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில், உணவருந்திக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவர் மோகித் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆர்.கே.பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இறந்த மாணவனின் குடுபம்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், அம்மனேரி கொண்டாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்த மோஹித் (வயது 12) த/பெ. சரத்குமார் என்பவர் இன்று (16.12.2025) நண்பகல் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News