தர்கா இடத்தில்தான் தூண் உள்ளது... அங்கு தீபம் ஏற்ற கூடாது - ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம்
- திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது.
- திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு வழியாக தூணிற்கு செல்ல வேண்டுமென்றால் எங்கள் உரிமை பாதிக்கப்படும்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவின்படி சம்பந்தப்பட்ட தூணில் தீபம் ஏற்றவில்லை. மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கும், தீபத்தூணுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என அரசு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
திருப்பரங்குன்றம் மலையில் என்னென்ன வழிபாட்டு தலங்கள் உள்ளன என ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் அமர்வு கேள்வி எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தர்கா உள்ளது. அதில் தொழுகையும் நடந்து வருகிறது. மலை உச்சியில் தர்கா, பின்பக்கத்தில் காசி விஸ்வநாதர் கோவில் இருபிரிவினரும் வந்து செல்ல தனித்தனியாக பாதை உள்ளதாக வக்பு வாரியம் தெரிவித்தது.
திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு சொந்தமான, அது சார்ந்த நிலங்கள் என்னென்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த வக்பு வாரியம்,
மலை உச்சியில் உள்ள தர்கா, அதை சுற்றியுள்ள அடக்க ஸ்தலங்கள், நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம். நெல்லித்தோப்பு, மலையில் உள்ள பாதை, படிக்கட்டுகள் தர்காவுக்கு சொந்தமான நிலங்கள் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தர்காவுக்கு சொந்தமான இடங்கள் குறித்து விசாரணையின்போது தனிநீதிபதி சுவாமிநாதன் கவனத்தில் கொள்ளவில்லை என்று தெரிவித்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்கா அருகில் உள்ள தூண் தொடர்பான படங்களை ஐகோர்ட் நீதிபதிகள் பார்த்தனர்.
மலை உச்சியில் உள்ள தூணிற்கு செல்லும் பக்தர்கள் தர்காவை கடந்து செல்ல வேண்டுமா? வேறுபாதை உள்ளதா? என நீதிபதிகள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த வக்பு வாரியம்,
தர்காவை ஒட்டி குதிரைசுனை உள்ளது. அதனை தாண்டி தூண் உள்ளது. தர்காவிற்கு படிக்கட்டு பாதை உள்ளது. நெல்லித்தோப்பு தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என உத்தரவு உள்ளது.
மனுதாரரின் வழக்கால் தூண் யாருக்கு சொந்தம். அந்த நிலம் யாருக்கு சொந்தமானது என பிரச்சனை எழுந்துள்ளது. தூண் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை உரிமையியல் நீதிமன்றத்தில் தான் தீர்க்கப்பட வேண்டும்.
தீபத்தூண் என மனுதாரர் குறிப்பிடும் தூண் தர்கா இடத்தில்தான் உள்ளது. தீபத் தூணுக்கு செல்லும் மலைப்பாதையும் தர்காவுக்கு தான் சொந்தம்.
திருப்பரங்குன்றம் மலையில் நெல்லித்தோப்பு வழியாக தூணிற்கு செல்ல வேண்டுமென்றால் எங்கள் உரிமை பாதிக்கப்படும். தூணும் தர்கா இடத்தில் உள்ளதால் அங்கு தீபம் ஏற்றுவதில் வக்பு நிர்வாகத்திற்கு உடன்பாடு இல்லை.
மலை உச்சியில் தர்கா இருக்கும் பகுதி சிக்கந்தர் மலை என்று தான் பல ஆண்டுகளாக அழைக்கப்பட்டு வருகிறது. 1920-ம் ஆண்டு உரிமைகள் நீதிமன்றம் வழங்கிய உரிமையை தர்காவிற்கு உறுதி செய்ய வேண்டும் என வக்பு வாரியம் வேண்டுகோள் விடுத்தது.