சட்டசபை தேர்தல் தேதி அறிவித்ததும் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை - வைகோ
- மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சமத்துவ நடைபயணம் வருகின்ற ஜனவரி 2-ந்தேதி மேற்கொள்ள உள்ளேன்.
- மக்கள் மன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு தான் ஆதரவு உள்ளது.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். அப்போது அவர் திருச்சியில் இருந்து மதுரை வரை ஜனவரி 2-ந்தேதி தனது தலைமையில் நடைபெறும் "சமத்துவ நடைப்பயணத்தை" தொடங்கி வைப்பதற்கான விழா அழைப்பிதழை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கி னார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சமத்துவ நடைபயணம் வருகின்ற ஜனவரி 2-ந்தேதி மேற்கொள்ள உள்ளேன். 950 பேர் இந்த நடைபயணத்தில் மேற்கொள்ள உள்ளனர்.
திருச்சி உழவர் சந்தையில் மது ஒழிப்பு நடைபயணத்தை ஜனவரி 2-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நடைபயணத்தில் விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன், கமல்ஹாசன், நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.
ஜனவரி 12-ந்தேதி மதுரையில் கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் நிறைவு நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். கட்டுப்பாடாகவும், போக்குவரத்து ஒழுங்கு செய்வதாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படும்.
மக்கள் மன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு தான் ஆதரவு உள்ளது. 2026 சட்ட மன்ற பொது தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும். யார் எந்த முயற்சி செய்தாலும் தவிடு பொடியாகி விடும்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் இப்போது அதற்கான தேவையில்லை.
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெரும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமையும் யார் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் மக்கள் மத்தியில் தி.மு.க. கூட்டணிக்கு வரவேற்பு இருப்பதை மக்கள் மத்தியில் பார்க்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தனர்.
குடிமனைபட்டா கோரி இன்று நடத்தும் பேரணி தொடர்பாக கோரிக்கை வைத்து பேசினார்கள். அதேபோல் மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் கட்சியின் தேசிய தலைவர் ராஜாராம் சிங், மாநில செயலாளர் ஆசை தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.