தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க. தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அ.தி.மு.க. குரல் கொடுக்கும்- பொள்ளாச்சி ஜெயராமன்

Published On 2025-10-10 09:41 IST   |   Update On 2025-10-10 09:41:00 IST
  • ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும்.
  • அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க., தமிழகத்தின் மக்கள் உரிமையை பெற்றுத்தரக்கூடிய கட்சி. கரூர் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்டால் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தயக்கம். த.வெ.க., தொண்டர்களை பொய் வழக்குகளை போட்டு மிரட்டுகிற செயல்களில் மு.க.ஸ்டாலின், காவல்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த வண்டி வெகுகாலம் ஓடாது.

த.வெ.க., தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதற்கு அ.தி.மு.க., குரல் கொடுக்கும். கோவையில் ரூ.1635 கோடியில் பெரிய பாலத்தை தொடங்கி வைத்துள்ளனர். 4 ஆண்டு காலத்துக்கு முன்னரே வேலை எல்லாம் முடிந்து விட்டது.

4 ஆண்டுகளாக இறங்குதளம் அமைக்கும் வேலையும், பெயிண்ட் அடிக்கும் வேலையும் தான் செய்திருக்கிறார்கள். இந்த பாலத்தை கொண்டு வந்தது அ.தி.மு.க., என்று மக்கள் அறிவார்கள். வழக்கம் போல மு.க.ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி, தான் செய்தது போல காட்டுவது வேடிக்கை, நகைச்சுவை.

ஜனநாயகத்தை காக்க சர்வாதிகாரத்தை ஒழிக்க எல்லோரும் ஒன்று சேர வேண்டும். மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்.

அ.தி.மு.க. மாபெரும் கூட்டணியை அமைக்கும். அ.தி.மு.க. கூட்டத்தில் த.வெ.க.வினர் வந்தது கூட்டணிக்கு பிள்ளையார் சுழி என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதில் இருந்து நீங்களே புரிந்து கொள்ள வேண்டும் என்றார். 

Tags:    

Similar News