தமிழ்நாடு செய்திகள்

அஜித் குமாரை துன்புறுத்த நண்பர் மூலம் மிளகாய் பொடி வாங்கிய போலீசார்: சி.பி.ஐ. விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Published On 2025-08-08 12:24 IST   |   Update On 2025-08-08 12:24:00 IST
  • சி.பி.ஐ. அதிகாரிகள் போலீசார் அளித்த தகவல்களை வீடியோ பதிவும் செய்துகொண்டனர்.
  • அஜித் குமாரை கொடூரமாக தாக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தரிசனத்திற்கு வந்த நிகிதா என்ற பெண் காரில் வைத்திருந்த நகை மாயமான புகாரில் அங்கு பணியாற்றிய காவலாளி அஜித்குமார் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரின் விசாரணையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா ஆகிய ஐந்து பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் அஜித் குமாரை கொடூரமாக தாக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. மேலும் அஜித் குமார் விசாரணைக்காக எங்கெங்கு அழைத்து செல்லப்பட்டார், அப்போது என்ன நடந்தது? எனவும் விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் போலீசார் அளித்த தகவல்களை வீடியோ பதிவும் செய்துகொண்டனர்.

கடந்த 25 நாட்களாக நடைபெற்றுவரும் சி.பி.ஐ. விசாரணையில் அஜித்குமார் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஏராளமான ஆதாரங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். முன்னதாக அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாகவும், அவரை சித்ரவதை செய்ய மிளகாய் பொடி பயன்படுத்தப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

இந்தநிலையில் சி.பி.ஐ. விசாரணையில், அஜித் குமாரை சித்ரவதை செய்ய மிளகாய்ப்பொடி எங்கு, எப்போது வாங்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் மடப்புரம் கோவிலின் கார் பார்க்கிங் அருகே உள்ள ஒரு மளிகைக் கடையில், அஜித் குமாரின் நண்பர் ஒருவர், காவல்துறையினர் கூறியதன் அடிப்படையில், மிளகாய்ப்பொடியை வாங்கி கொடுத்தது தெரியவந்துள்ளது. இந்த தகவல் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News