ராமதாஸ் முடிவு தவறு- அன்புமணிக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த பா.ம.க. பொருளாளர்
- பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது.
- டாக்டர் அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்…
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, இனி பா.ம.க. தலைவர் நான் தான் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். மேலும் பா.ம.க. தலைவர் பதவியை தானே எடுத்துக்கொள்வதாகவும், பா.ம.க. தலைவராக இருந்த அன்புமணியை செயல்தலைவராக நியமிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, பா.ம.க. தலைவராக இருக்கும் அன்புமணியை நீக்க ராமதாசுக்கு அதிகாரம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க. விதிகளின் அடிப்படையில் பொதுக்குழுவிற்கே தலைவரை நீக்கம் அதிகாரம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பா.ம.க.வில் உள்ள நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூல் பக்கத்தில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை அய்யா எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு......
அன்புதானே எல்லாம் என்றும்
டாக்டர் அன்புமணியின் முடிவுக்காக காத்திருக்கிறேன்…
ஏற்கனவே சொன்னது தான்…
தனி நபர்களை விட தலைமை பெரியது
தலைமையை விட இயக்கம் பெரியது
இயக்கத்தை விட சமூகம் பெரியது
சமூகத்தின் நலன் காக்கப்பட வேண்டுமெனில் அது தற்போதைய சூழலில் டாக்டர் அன்புமணி தலைமையில் மட்டுமே…
டாக்டர் அன்புமணி வழியில் நாம்... என்று பதிவிட்டுள்ளார்.