உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார்.
- தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்.
உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி கிராமத்தில் கடந்த 5ம் தேதி திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் அதிதீவிர மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வீடுகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இதற்கிடையே சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த மேகவெடிப்பு மற்றும் தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று சென்றார். மாலையில் தலைநகர் டேராடூன் செல்லும் அவர், ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அதன்பின் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக தலைநகர் டேராடூனுக்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். அப்போது, பேரிடர் பாதிப்புகளைச் சரிசெய்வதற்காக அம்மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இத்துடன், வெள்ளம் மற்றும் பேரிடரால் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் மறுவாழ்வுக்கு, சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவது, தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைப்பது, பள்ளிகளை புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.