இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணமா? - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

Published On 2025-11-13 17:34 IST   |   Update On 2025-11-13 21:52:00 IST
  • அகமதாபாத் ஏர் விமான விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
  • விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார்.

கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்து, மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.

விமானத்தின் தலைமை விமானியாக இருந்த சுமித் சபர்வாலும் விபத்தில் இறந்தார். விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது.

மேலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.

இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விரைவாக "கட்ஆஃப்" நிலைக்குச் சென்றதாக அறிக்கை கூறியது. சுமார் 10 வினாடிகளுக்குப் பிறகு, சுவிட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டன, ஆனால் என்ஜின்கள் ஏற்கனவே அணைந்து விமானம் விபத்துக்குள்ளானது என்று அறிக்கை கூறியது.

இந்த அறிக்கையை எதிர்த்து சுமித் சபர்வால் தந்தை புஷ்கராஜ் சபர்வால் மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு (எஃப்ஐபி) இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்றைய விசாரணையில், ஏஏஐபி அறிக்கையுடன் உடன்படவில்லை என்றும் விமானியை குறை சொல்ல முடியாது என்றும் தெரிவித்தது.

மேலும் இதுகுறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு (டிஜிசிஏ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

இந்நிலையில், அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி காரணம் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இத்தகவல் தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. 

Tags:    

Similar News