தமிழ்நாடு செய்திகள்

விஜய் கட்சியுடன் கூட்டணிக்கு முயற்சி?- ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை

Published On 2025-08-04 14:18 IST   |   Update On 2025-08-04 14:18:00 IST
  • செப்டம்பர் 4-ந் தேதி நடத்த உள்ள மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
  • மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதில் உறுதியாக இருக்க வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.

பெரியகுளம்:

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக விடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அடுத்தடுத்து சந்தித்த நிகழ்வு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு வருகை தந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு பூங்கொத்து கொடுத்து பா.ஜ.க.வில் இருந்து விலகியதாக விடுத்த அறிவிப்புக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது செப்டம்பர் 4-ந் தேதி நடத்த உள்ள மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் மாநாட்டின்போது எடுத்து வைக்க வேண்டிய மக்கள் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவதில் உறுதியாக இருக்க வேண்டும் என தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.

இதற்கு அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்தனர். இது குறித்து அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கையில், காலம் கடந்து எடுத்த முடிவு என்ற போதும் பா.ஜ.க.வில் இருந்து விலகியது ஓ.பி.எஸ். உடைய துணிச்சலான முடிவு. இத்தனை ஆண்டுகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றவுடன் அவரை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். அவர் விலகிய பிறகும் ஒரு சிலர் சமரசம் பேச முயன்று வருகின்றனர்.

ஆனால் தனது நிலைப்பாட்டில் ஓ.பி.எஸ். உறுதியாக உள்ளார். அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் மாநாட்டில் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து வெளியிடுவார். நகர்மன்ற தலைவர் பதவி தொடங்கி எம்.எல்.ஏ., அமைச்சர், 3 முறை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அவை முன்னவர், கட்சியின் பொருளாளர் என பல்வேறு பொறுப்புகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவருக்கு வழங்கியுள்ளார். இனிமேல் அவருக்கு புதிய பதவி கிடைக்கப்போவதில்லை. எனவே பதவிக்காக யாருடனும் சேர வேண்டிய அவசியமும் இல்லை.

வருகிற தேர்தலில் ஓ.பி.எஸ். எடுக்கும் முடிவு அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்ததை வைத்து தி.மு.க.வில் இணையப்போவதாக பொய்யான செய்தியை பரப்பி வருகின்றனர். அவர் ஒரு போதும் தி.மு.க.வில் இணைய மாட்டார் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.

விஜய் கட்சியுடன் இணைந்து வருகிற தேர்தலை சந்திக்க பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அது குறித்தும் அவர் ஆலோசித்து முடிவு செய்வார் என்றனர்.

Tags:    

Similar News