தீபாவளி பண்டிகை: தென் மாவட்ட சிறப்பு ரெயில்கள் எண்ணிக்கை குறைவு- பயணிகள் அதிருப்தி
- இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
- தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் பஸ், ரெயில் மற்றும் கார்கள் மூலமாக பயணம் மேற்கொள்கின்றனர். ரெயில்களை பொறுத்தவரையில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவா்கள் 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால், தீபாவளி முன்பதிவின்போது உடனடியாக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும். 300-க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருப்பு பட்டியலுக்கு சென்றுவிடுவார்கள்.
இதுபோன்று காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகளுக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், சென்னையில் இருந்து கடந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த சிறப்பு ரெயில்களும் போதுமானதாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, பயணிகளின் வசதிக்காக பண்டிகை காலங்களில் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டு அக்டோபர் 20-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு முழுமையாக முடிந்து காத்திருப்பு பட்டியலில் பலரும் உள்ளனர். இதற்கிடையே, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைகளின்போது பயணிகளின் வசதிக்காக இந்தியா முழுவதும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான சிறப்பு ரெயில்களை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்துள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஆனால், தெற்கு ரெயில்வே சார்பில் 11 சிறப்பு ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை, கன்னியாகுமரி, நாகர்கோவில், செங்கோட்டை, திருவனந்தபுரம், எர்ணாகுளத்திற்கும், எழும்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கும், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில், செங்கல்பட்டில் இருந்து நெல்லைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே வாரியத்திடம் தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைந்த அளவிலான சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, ரெயில் பயணிகள் கூறியபோது, 'தீபாவளி பண்டிகை ரெயிலுக்கான முன்பதிவின்போது வழக்கமான ரெயில்களுக்கான டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுதீர்ந்துவிடுகிறது. இதனால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். ஆனால் பண்டிகை காலங்களில் போதுமான அளவு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதில்லை. கூடுதல் ரெயில்கள் இயக்க தொடர்ந்து கோரிக்கை எழுப்புகிறோம். ஆனால் கூடுதல் ரெயில்கள் இயக்குவதில்லை. இந்த ஆண்டும் வெறும் 11 ரெயில்கள் இயக்க பரிந்துரை செய்துள்ளனர். இது எந்தவிதத்தில் நியாயம். சொந்த ஊர்களுக்கு ரெயில்களில் டிக்கெட் கிடைக்காததால் மிகவும் அவதியுடன் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது' என்றார்கள்.
இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'தெற்கு ரெயில்வேயில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்க போதுமான ரெயில் பெட்டிகள் இல்லை. எனினும் பயணிகள் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரெயில்களில் அதிகபட்சமாக 24 பெட்டிகள் வரை இணைத்து இயக்க முடியும்.
எனவே, கொல்லம், செங்கோட்டை, நாகர்கோவில், நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட நெரிசல் மிக்க வழித்தடங்களில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில், ஓரிரு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படும். இதுதவிர, 2 பயணிகள் ரெயிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூடுதலாக எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது என்பது குறித்து முழுமையாக தெரியவரும்' என்றார்கள்.