வாக்காளர் அட்டையில் 'இனிசியல்' இல்லையா?- வந்திருச்சு புது சிக்கல்
- வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
- வடமாநிலங்களில் ஆதாரில் ‘இனிசியல்’ போட மாட்டார்கள்.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 4-ந்தேதி முதல் வீடு, வீடாக சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 94 சதவீத வீடுகளுக்கு கணக்கெடுப்பு படிவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையிலும் சமர்ப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் அதில் விண்ணப்பத்தை பதிவு செய்ய முடியவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். அதாவது ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் இருப்பவர்கள் மட்டுமே அதில் 'லாகின்' செய்ய முடிகிறது. செல்போன் எண் இல்லாதவர்கள், புதிதாக மனு செய்ய வேண்டி இருக்கிறது. பின்னர் படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளுக்கு பதிலை பூர்த்தி செய்தவுடன் சமர்ப்பிப்பதற்கு ஆதார் எண் 'ஓ.டி.பி.' அங்கீகாரம் கொடுக்க வேண்டி இருக்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானோருக்கு உங்களது பெயர் சரியாக இல்லை என்றே வருகிறது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஆன்லைனில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது, வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பொதுவாக தமிழகத்தில் ஆதார் அட்டையில் ஒருவரது பெயருடன் 'இனிசியல்' அல்லது தந்தை பெயரும் முழுமையாக சேர்க்கப்பட்டு இருக்கும். ஆனால் வாக்காளர் அட்டையில் முதல் பெயர் மட்டுமே இருக்கும். அவருடைய 'இனிசியல்' சேர்க்கப்பட்டு இருக்காது. தந்தை பெயர் அதற்கு கீழ் தனியாக இருக்கும். இந்த பிரச்சனை தமிழகம் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களில் உள்ளது.
வடமாநிலங்களில் ஆதாரில் 'இனிசியல்' போட மாட்டார்கள். தந்தை மற்றும் சாதி பெயரை சேர்த்து மொத்தமாக இருக்கும். அல்லது தங்கள் பெயர் மட்டுமே இருக்கும். அதேபோலதான் வாக்காளர் அடையாள அட்டையிலும் தங்களது பெயர் மட்டுமே இருக்கும்.
எனவே இந்த பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.